பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப் பொருள்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைக் கடத்தும் முயற்சி சர்வதேச எல்லையில் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அமிர்தசரஸில் உள்ள பி.எஸ்.எஃப். மண்டலத் தலைவர் அதுல் ஃபுல்சேல் பேசுகையில், "இந்த ஆண்டில் இதுவரை 255 பாகிஸ்தான் ட்ரோன்கள் எல்லையில் மறித்துச் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
மீட்கப்பட்ட கடத்தல் பொருட்கள்:
ட்ரோன்கள் மூலம் கடத்த முயன்ற 329 கிலோ ஹெராயின்
16 கிலோ ஐஸ் (மெத்தாம்பேட்டமைன்)
191 ஆயுதங்கள்
12 கையெறிக் குண்டுகள்
10 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பனிக் காலத்தில் நிலவும் அதீத பனிமூட்டத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் கடத்தலை முறியடிக்க சிறப்பு கண்காணிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், ஆறுகளின் கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எல்லைச் சாலைகளில் கடத்தலைத் தடுக்க, பி.எஸ்.எஃப். மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் இணைந்து கூட்டுச் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 19 பாகிஸ்தானியர்கள் மற்றும் 240 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பி.எஸ்.எஃப். அதிகாரி தெரிவித்தார்.