நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து சில கருத்துக்களை கூறுகிறார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “இன்று நடந்த கூட்டத்தில் வரும் தேர்தல் குறித்து ஆலோசனை செய்தோம். பூத் கமிட்டி குறித்து ஆலோசனை செய்தோம்.
எங்கள் கூட்டணி கட்சிகளின் பெருமையும் அதனால் ஏற்படப்போகும் நன்மையையும் குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தேன். ஏன் இந்த கூட்டணி அமைத்தோம் என்பது குறித்து விளக்கி உள்ளேன். நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து சில கருத்துக்களை கூறுகிறார்கள். கூட்டத்தில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது” என்றார்.