அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.