2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சி இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகத்தில் முதன்முறையாக ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதற்காகப் பெருமுயற்சி மேற்கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி. இந்த உலகக் கோப்பையை நடத்துவதன் மூலம் உலக நாடுகளின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பி உள்ளது. இந்தியாவி்ல் விளையாட்டின் தலைநகரமாகத் தமிழகம் மாறி உள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.
மழைக்கால முன்னெச்சரிக்கை:
பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், "மழைக்காலம் என்று சொன்னால் எந்தெந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது, அப்படித் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற வேண்டும். கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மேலும், மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
தி.மு.க. கூட்டணி பலம்:
அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். ஒவ்வொருவர் ஒவ்வொரு கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும், பொது எதிரியாக இருக்கக்கூடியது யார் என்பது நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு உள்ளது" என்றார்.
மேலும், ராகுல்காந்தி, நடிகர் விஜயிடம் பேசியது குறித்துத் தனக்குத் தெரியாது என்றும், அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.