தென்காசியில் தொடரும் கனமழை…. குற்றாலம் அருவியில் குளிக்க தடை
TV9 Tamil News November 19, 2025 12:48 AM

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்காசி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் (Courtallam) அருவியில் நீர்வரத்து வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அது வெள்ளமாக மாறக்கூடும் என கூறப்படுகிறது. இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளை ஆய்வு செய்த  பிறகு குளிக்க தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிடிக்கப்பட்டுள்ளது. மற்ற அணைகளில் ஆய்வு செய்த பிறகு குளிக்க தடைவிதிப்பது குறித்து முடிவடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் விடிய விடிய பெய்த மழை.. இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

இந்த நிலையில், நவம்பர் 22, 2025 அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் பருவமழை மீண்டும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நவம்பர் 22 மற்றும் 23, 2025 ஆகிய தேதிகளில் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய  மாவட்டங்களில் இரு நாட்களிலும்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. மக்களே அலர்ட்!

கடலோரப் பகுதிகளில் கனமழை

கடந்த 24 மணி நேரத்தில் நவம்பர் 18, 2025 அன்று காலை 8.30 மணி வரை கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.  நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதியில்  12 செ.மீ மழையும்,  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் 9 செ.மீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் 8 செ.மீ மழையும், வேதாரண்யம், தலைஞாயிறு, கொள்ளிடம், சீர்காழி ஆகிய இடங்களில் 7 செ.மீ மழையும், பாம்பன், புதுச்சேரி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை  ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.