நான் இப்போது எந்த பொறுப்பில் இருக்கிறேன், விலகுவதற்கு..? என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று முழங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் சுராஜ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அவரது கட்சி நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் 240 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், “பீகார் மக்களின் நம்பிக்கையை என்னால் வெல்ல முடியவில்லை என்பதற்கு நான் 100 சதவீத பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நவம்பர் 20 ஆம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மவுன விரதம் அனுசரிப்பேன். பீகாரை மேம்படுத்த வேண்டும் என்ற எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின் வாங்க முடியாது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றிப் பெற்றால் ஓய்வு பெறுவேன் என்று சொன்னேன். ஆனால் நான் எந்தப் பதவியிலும் இல்லை. அப்படியானால் எந்தப் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்ய வேண்டும்? நான் பீகாரை விட்டு விலகுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. நான் அரசியல் செய்ய மாட்டேன் என்று சொன்னேன். அதில் உறுதியாக உள்ளேன். மக்களின் குரலை உயர்த்துவதைதான் நான் செய்கிறேன், அது அரசியல் இல்லை. முயற்சித்தும் தோல்வியடைந்தோம், இதை செய்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.