வளிமண்டல தாழ்வு பகுதியின் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகப் பகுதிகளில் இன்றிரவு முதல் மழைப்பொழிவு தீவிரமடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலைக்குள் மழை தீவிரமடையும். இந்த நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பதிவான நிலையில், அடுத்த 2-3 நாட்களுக்குக் கனமழைக்கான வாய்ப்பு குறையும். இருப்பினும், அதிக மழைப்பொழிவு கடலோரத்தை ஒட்டிய பகுதிகளில் இருக்கும்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது குமரிக்கடல் மற்றும் இராமநாதபுரம் கடல் பகுதிகளில் நிலவுவதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்குப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் மாத இறுதியில் தமிழகத்தை அச்சுறுத்தும் வகையில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு முன்பு மிதமான மழை தொடரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
Edited by Mahendran