நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) இணையும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தமிழக பாஜக மேலிடம் நம்பிக்கையுடன் கூறி வருகிறது. பீகார் தேர்தல் வெற்றியின் பின்னர், பாஜக தலைவர்கள் இந்த பேச்சுக்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.
தமிழக பாஜக இணை அமைப்பாளர் எம். நாச்சியப்பன்,“2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தவெக, என்.டி.ஏ.வில் சேருவார். இந்த கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்,”என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பீகார் வெற்றியால், தேசிய அளவில் பாஜகவிற்கு மீண்டும் ஆதரவு அலை உருவாகியுள்ளதாகவும், இது நடிகர் விஜயின் முடிவிலும் தாக்கம் செலுத்தும் என்றும் பாஜக நிர்வாகிகள் கருதுகின்றனர்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிற பொதுக் கூட்டங்களில் கிடைக்கும் மக்கள் வரவேற்பும், திமுக மீது உயர்ந்து வரும் மக்கள் அதிருப்தியும், இந்த கூட்டணிக்குத் தாரகமான வாய்ப்பை ஏற்படுத்தும் என பாஜக தரப்பில் பேசப்படுகிறது.
இதேநேரத்தில், நவம்பர் 29 அன்று கும்பகோணத்தில் பாஜகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதிலும் முக்கியமாக —பாஜக மூத்த தலைவர் அமித் ஷா விரைவில் தமிழகம் வருகிறார்.
அவரது வருகைக்கு மூன்று பெரிய காரணங்கள் கூறப்படுகின்றன:அதிமுக உட்கட்சி பிரச்சனைகள், இடப்பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்துவது.2026 தேர்தலுக்கான கூட்டணி வடிவமைப்பு மற்றும் மதிப்பாய்வு.விஜய் அல்லது அவரது முக்கிய பிரதிநிதிகளை சந்திப்பது.
அமித் ஷா விஜயை நேரடியாகச் சந்திக்கலாம் அல்லது முதற்கட்டமாக விஜயின் நெருங்கிய நபர் ஒருவரைச் சந்தித்து NDA-வின் திட்டங்கள் குறித்து விளக்க வாய்ப்புள்ளதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், நடிகர் விஜய் மற்றும் அமித் ஷா நேருக்கு நேர் சந்திப்பும் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால்,“தவெக–பாஜக கூட்டணி உருவாகுமா?”என்ற கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.