“விளையாட வரலனா 'ஆக்ஷன்' உறுதி! … “இன்று முத்தரப்பு தொடர்… அதற்குள் இலங்கைக்கு வந்த சோதனை! அசலங்கா, ஃபெர்னாண்டோ தாயகம் திரும்பியது ஏன்?
SeithiSolai Tamil November 18, 2025 09:48 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது. அடுத்ததாக இன்று (நவ. 18) முத்தரப்பு 20 ஓவர் தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகள் களம் காண்கின்றன.

இந்தச் சூழலில், இஸ்லாமாபாத் கோர்ட்டு வளாகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் காரணமாக இலங்கை வீரர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. பெரும்பாலான வீரர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் அரசு முழுமையான பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தது.

இந்த நிலையில், தொடர்ந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், அதையும் மீறி நாடு திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே, இலங்கை அணியின் கேப்டன் சாரித் அசலங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாகத் தாயகம் திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எனினும், அவர்கள் எந்த மாதிரியான உடல்நலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து வாரியம் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

கேப்டன் அசலங்காவுக்குப் பதிலாக, ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா இலங்கை அணியை வழிநடத்த உள்ளார். இன்று முத்தரப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ராவல்பிண்டியில் மோதுகின்றன. பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், முக்கிய வீரர்கள் விலகியிருப்பது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.