தமிழகத்தில் பொது வாழ்வும், அரசியலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நடைபயணம் மேற்கொள்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ நடத்தவுள்ள சமத்துவ நடைபயணத்திற்கு உறுப்பினர் சேர்ப்பதற்கான நேர்காணலை மதுரையிலுள்ள தனியார் ஓட்டலில் நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 7,000 கிலோ மீட்டர் நடந்துள்ளேன். தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவதால் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்கிறார்கள். சில இடங்களில் பெண்கள் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. அரிவாள், பட்டா கத்தியுடன் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள். இவற்றிலிருந்து இளைஞர்களை, மாணவர்களை மீட்பதற்காக, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறேன். மது, புகை பழக்கமுள்ளவர்களை தொண்டரணியில் சேர்க்க மாட்டேன். தப்பித்தவறி மதுவோ, புகையோ எனது நடைபயணத்தில் உடன் வரும் இளைஞர்கள் பிடித்தால் அவர்களை அப்படியே அனுப்பி விடுவேன்.
எங்களுடைய நடை பயணங்களில் ஒருபோதும் கூட்ட நெரிசலால் எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை. டிராபிக் போலீஸ் செய்வதை விட எங்கள் கட்சியில் உள்ள பாதுகாப்பு பிரிவினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி எங்கள் நடைபயணத்தை மேற்கொள்ள பணியாற்றுவார்கள். பொதுமக்கள் எங்கள் பயணங்களை பார்த்து எவ்வளவு "கட்டுப்பாடாக செல்கின்றனர்" என ஆச்சரியப்படுவார்கள். தமிழ்நாட்டின் பொது வாழ்வும், அரசியலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன். என்னுடைய எந்த நடைபயணத்திலும் என் கட்சிக்கு ஒட்டு கேட்டதில்லை. ஆனால் இப்பொது திராவிட இயக்க கோட்டையை காக்க, இந்த நடை பயணத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் அரசை நீடிக்க செய்யுங்கள். காலை சிற்றுண்டி திட்டம் வழங்கியவர் ஸ்டாலின். திமுக ஆட்சி தொடர ஆதரியுங்கள் என நான் வேண்டுகோளாக வைக்க உள்ளேன்” என்றார்.