தஞ்சாவூர்: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் நத்தம் பகுதியில் இன்று (நேற்று) நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 கோடியே 50 லட்சமாவது பயனாளிக்கு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் மருந்துப் பெட்டகங்களை வழங்கினர். இதைத் தொடர்ந்து, தென்னங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவக் கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "கடைக்கோடி மனிதர்களுக்கும் மருத்துவ சேவை முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்யவே இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2 கோடி பயனாளிகளைக் கடந்த நிலையில், உலகில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வழங்குவதிலும், அவற்றைத் தடுப்பதிலும் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழகம் கண்டறியப்பட்டு, கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் விருது வழங்கப்பட்டது" என்று பெருமிதம் தெரிவித்தார்.
டெங்கு பாதிப்பு குறித்துப் பேசிய அவர், "கடந்த 2012 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் (அ.தி.மு.க. ஆட்சியில்) டெங்கு பாதிப்பால் முறையே 66 மற்றும் 65 பேர் உயிரிழந்தனர்.
இந்த இரண்டு ஆண்டுகளில்தான் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால், கடந்த 11 மாதங்களில் வெறும் 9 பேர் மட்டுமே டெங்குவால் இறந்துள்ளனர். இந்த ஒன்பது பேரும் இணை நோய் பாதிப்புடன் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதவர்கள் ஆவர். தி.மு.க. ஆட்சியில் டெங்கு உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளன.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பு; யாரும் பதற்றம் அடைய வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.