லண்டனில் உள்ள மிகப் பழமையான உணவகங்களில் ஒன்று வீராசாமி உணவகம். ஏப்ரல் 1926 முதல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிச்செலின்-ஸ்டார் உணவகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகம் கிரவுன் எஸ்டேட் (Crown Estate) எனும் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. இந்த கிரவுன் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துகள் லண்டன் மன்னருக்கு உரிமையுள்ள தனித்துவமான சொத்து நிறுவனமாகும்.
அதே நேரம் இது அரசரின் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படாது. அதாவது, இதன் மூலம் வரும் வருமானம் அரசின் கருவூலத்துக்குச் செல்லும். ஆனால் அரசோ, மன்னரோ இதை சொந்தம் கொண்டாட முடியாது.
இப்படியான நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில்தான் வீராசாமி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிரவுன் எஸ்டேட் கட்டடத்தின் மேல் தளங்களில் உள்ள வரவேற்புப் பகுதியை விரிவாக்கும் திட்டம் இருப்பதால், வீராசாமி உணவகத்தின் குத்தகை புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிரவுன் எஸ்டேட் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பிரிட்டனின் முன்னணி சமையல்காரர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
சைரஸ் டோடிவாலா, ரேமண்ட் பிளாங்க், மைக்கேல் ரூக்ஸ் போன்ற பிரபல சமையல்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள், ``கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக செயல்படும் ஒரு உணவகத்தை அகற்றும் முடிவு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. எனவே, கிரவுன் எஸ்டேட் அமைப்பு பொறுப்புடன் செயல்பட வேண்டும்" எனக் கேட்டுகொண்டது.
அப்படி என்ன ஸ்பெஷல்?சுமார் 100 ஆண்டுகளாக செயல்படும் இந்த உண்வகம் லண்டனின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த ஹோட்டலை நிறுவியவர் ஆங்கிலோ - இந்தியரான எட்வர்ட் பால்மர் (Edward Palmer).
london veeraswamy restaurant
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸின் இராணுவ செயலாளராக இருந்தவர் ஜெனரல் வில்லியம் பால்மர். இவரும் முகலாய இளவரசி ஃபைசான் நிசா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் கொள்ளுபேரன்தான் எட்வர்ட் பால்மர்.
சமையல் கலையின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர், இங்கிலாந்தில் வீராசாமி என்றப் பெயரில் உணவகம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த உணவகத்தின் முதல் மெனுவை கொள்ளுப்பாட்டியிடமிருந்து பெற்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்தியப் பாரம்பரியம் மீது ஆர்வமுடன் இருந்த எட்வர்ட் பால்மர், E P வீராசாமி என்றப் பெயரில் சமயல்கலை புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
இப்போது யார் நிர்வகிப்பது?வீராசாமி உணவகத்தை, லண்டனில் இயங்கும் உயர்தர (Fine Dining) இந்திய உணவகங்களின் குழுமமான MW Eat நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் வீராசாமி மட்டுமின்றி, லண்டனில் உள்ள மற்ற பிரபலமான மற்றும் விருது பெற்ற இந்திய உணவகங்களையும் நடத்துகிறது.
கிரவுன் எஸ்டேட் என்ன சொல்கிறது?இந்த விவகாரம் தொடர்பாக கிரவுன் எஸ்டேட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``குத்தகையை புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கையில் நாங்கள் எடுத்திருக்கும் முடிவு MW Eat-க்கு இது எவ்வளவு சவாலானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதில் கவனமாக இருக்கிறோம்.
அதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம். தற்போது இருக்கும் இந்த இடத்தைவிட்டு வீராசாமி உணவகம் கிரவுன் எஸ்டேட்டுக்குச் சொந்தமான வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். புதிய வளாகத்தைத் தொடங்கவும், அதற்கு ஆகும் செலவுக்காகவும் கிரவுன் எஸ்டேட் உதவி செய்யும். மேலும், இந்த இடத்தை விட்டு வெளியேற நேரிட்டால், MW Eat நிறுவனத்திற்கு ஏற்படும் வணிக இழப்புகளையும் கிரவுன் எஸ்டேட் பண வடிவில் இழப்பீடு வழங்கும்" எனத் தெரிவித்திருக்கிறது.
MW Eat முடிவு?கிரவுன் எஸ்டேட் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பதிலளித்திருக்கும் MW Eat நிறுவனம் ``பாதுகாக்கப்பட்ட குத்தகை உரிமைகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்ததால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு விசாரணைக்கு வரும். அதுவரை அதே இடத்தில் வீராசாமி உணவகம் செயல்படும். பிரிட்டனின் முன்னணி சமையல்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களைத் திரட்டி பொதுமக்களிடம் ஆதரவைப் பெறுவோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன?