தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள ராமச்சந்திரர் தெருவில் அமைந்துள்ள ‘மங்கள வில்லா’ எனும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கட்டிடத்தின் 2ம் தளத்தில் வசிக்கும் கிரிதர் குடும்பத்தின் வீட்டின் பூஜை அறையில் திடீரென தீப்பிடித்தது. நொடிப்பொழுதில் தீ அதிகரிக்கத் தொடங்கியதால், கிரிதரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்தபடி வெளியேறி உயிர் தப்பினர்.
அவ்வேளையில், தீ அலை மளமளவென மேல்தளங்களை நோக்கி பரவியது. கரும்புகை அடர்ந்து சூழ்ந்ததால் 3ம் தளத்தில் வசித்த குடும்பத்தினர் படிக்கட்டுகள் வழியாக இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் மொட்டை மாடிக்குச் சென்று தஞ்சம் அடைந்து உதவி கேட்டு கத்தினர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட நிலையங்களில் இருந்து தீயணைப்பு துறையின் ஏழு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சியுடன் மீட்பு பணியையும் மேற்கொண்டனர். மொட்டை மாடியில் சிக்கியிருந்த 6 பேரையும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் பாதுகாப்பாக கீழிறக்கி மீட்டனர்.

இதன் போது 3ம் தளத்தின் பின்புறத்தில் வசித்து வந்த 72 வயதான மருத்துவர் வரதராஜன் மற்றும் அவரது மனைவி மலர் ஆகியோர் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டின் உள்ளேயே இருந்தனர். அடர்ந்த புகையால் அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் இரும்புக்கோட்டை உடைத்து உள்ளே சென்று இருவரையும் மீட்டனர். மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?