அயோத்தி ராமர் கோவில் பிரம்மாண்ட கொடியேற்ற விழா: பிரதமர் மோடி, மோகன் பாகவத் பங்கேற்கவுள்ளனர்..!
Seithipunal Tamil November 19, 2025 08:48 AM

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் கோயிலில், நவம்பர் 25-ஆம் தேதி கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த கொடியேற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விழாவில் சுமார் 6,000 முதல் 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அயோத்தி துறவிகள், கிழக்கு உ.பி., அவத் பிராந்த், காசி பிராந்த், கோரக்ஷ் பிராந்த் மற்றும் பல்வேறு மடங்கள், வனவாசி பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடியேற்ற விழாவை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.