தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை கொடிசியா வளாகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் 'தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025' நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டு நிகழ்வுக்காகக் கோவை வரும் பிரதமர் மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவையில் அவரைச் சந்திப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறவு குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் மோடியைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளதாகப் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.