சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், அலிநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி (BJP) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 25 வயதில் மாநிலத்தின் இளைய MLA என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாகூர்.
இவர் 17 ஆண்டுகள் காலதாமதத்திற்குப் பிறகு அத்தொகுதியில் கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார். ஆனால், இந்த இசை மற்றும் அரசியல் வெற்றிக்குப் பின்னால், மைதிலி பல நிராகரிப்புகளையும், சவால்களையும், மனதைப் புண்படுத்தும் அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளார்.
குறிப்பாக, பள்ளி நாட்களில் சக மாணவிகளால் “அறிவற்ற பீஹாரி” என்று ஏளனப்படுத்தப்பட்ட ஒரு சோகமான பக்கமும் அவரது வாழ்வில் உள்ளது. இசைத் துறைக்குள் நுழைய முயற்சித்த போது ‘சா ரெ க மா ப லிட்டில் சாம்ப்ஸ்’ மற்றும் ‘இந்தியன் ஐடல்’ போன்ற பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இவர் நிராகரிக்கப்பட்டார்.

நிரந்தரத் தோல்விகளால் மனம் நொந்து, இசையை விட்டொழித்துவிட்டு UPSC தேர்வுக்குத் தயாராகலாம் என்றும் ஒரு கட்டத்தில் எண்ணியதாக அவர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
பள்ளிப் பருவத்தில், வசதி படைத்த மாணவிகளால் சூழப்பட்டிருந்த மைதிலி, தனது வறுமையான பின்னணி காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டார். “பீஹாரி” என்ற சொல் இழிவாகவும், சண்டையின் போது திட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் அளவுக்கு மாறியிருந்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக பத்து ஆண்டுகளில் சுமார் 17 வீடுகள் மாறி மாறி குடிபெயர்ந்ததாகவும், தனது தந்தையும், சகோதரர்களும் செய்யும் இசைப் பயிற்சி சத்தம் அண்டை வீட்டாருக்கு இடையூறாக இருந்ததால் அடிக்கடி வீடுகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் மைதிலியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சவால்களை எல்லாம் கடந்து வந்த மைதிலி, இன்று சமூக வலைதளங்களில் பல மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட பெரும் நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். தனது கடினமான பயணத்திற்குப் பிறகு, 2017-இல் டெல்லியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி, 2020-இல் அதை ஒலியைத் தடுக்கும் வசதியுடன் கூடிய பெரிய குடியிருப்பிற்கு மாற்றியுள்ளார்.