ஆண்கள் அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிப்பது நல்லதா?
BBC Tamil November 20, 2025 10:48 AM
Getty Images அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிப்பது உடல்நலனுக்கு நன்மை பயக்கும் என்பதற்கு உறுதியான மருத்துவ ஆதாரம் இல்லை. ஆனால், சுகாதார ரீதியாக இது சிறந்த முறையென பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

அமர வேண்டுமா, வேண்டாமா ?

ஆண்கள் கழிப்பறையில் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது பற்றிய விவாதத்தை உருவாக்கும் கேள்வி இதுதான்.

அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிப்பது உடல்நலனுக்கு நன்மை பயக்கும் என்பதற்கு உறுதியான மருத்துவ ஆதாரம் இல்லை என்றாலும், சுகாதார ரீதியாக இது சிறந்த முறையென பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

"சிறுநீர் கழிக்க சரியான அல்லது தவறான வழி என ஒன்று இல்லை. அது ஒவ்வொருவரின் வசதியைப் பொறுத்தது," என்று பிரிட்டனில் உள்ள சிறுநீரகவியல் அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் மேரி கார்த்வைட் பிபிசியிடம் கூறுகிறார்.

"ஆனால் கழிப்பறை சுத்தமாக இருந்தால், அமர்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பது மிகவும் சுகாதாரமானது " என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நடப்பதற்கு அல்லது சமநிலையில் இருப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு இது பாதுகாப்பான வழி என்றும், நள்ளிரவில் எழுந்து அவசரமாக கழிப்பறைக்கு செல்லும் நேரங்களில் அமர்வது வசதியாக இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார்.

Getty Images 2013-ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வு, ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழிக்கும் போது, நுண்ணிய சிறுநீர் துளிகள் சிதறி, பல் துலக்கும் பிரஷ் போன்ற பொருட்களை பாதிக்கக்கூடும் என்று கூறியது.

2014ல் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அதிகம் மேற்கோள் காட்டப்படுகிறது. அதில், உடலின் நிலை எவ்வாறு சிறுநீர் ஓட்டத்தின் அளவு மற்றும் காலம் (அதாவது, சிறுநீர்ப்பை எவ்வளவு விரைவாக காலியாகிறது) போன்றவற்றை பாதிக்கிறது என்பதை மருத்துவர் குழு ஒன்று ஆராய்ந்தது.

புரோஸ்டேட் பெரிதாகிய பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிப்பது, சிறுநீர் பையை வேகமாகவும் முழுமையாகவும் காலி செய்ய உதவுகிறது என்று அக்குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆரோக்கியமான ஆண்களிடம் "எந்த வித்தியாசமும் இல்லை" என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

உண்மையில், பெரும்பாலான ஆண்களுக்கு நின்றபடியே சிறுநீர் கழிப்பது மிகவும் எளிதான நடைமுறையாக உள்ளது.

பொது கழிப்பறைகளில் ஆண்கள்–பெண்கள் வரிசை நகரும் வேகத்தைப் பார்த்தால் இதை புரிந்துகொள்ளலாம்.

ஆனால், நின்றபடி சிறுநீர் கழிப்பதால் சிறுநீர் சுற்றுவட்டாரத்தில் சிதறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது பிறருக்கு சிரமத்தை ஏற்படுதலாம்.

இது வெறும் கழிப்பறை இருக்கைகள் அல்லது தரையில் தவறுதலாக விழும் சிறுநீர் துளிகள் பற்றியது மட்டுமல்ல.

நுண்ணிய துளிகள் "பல கோணங்களிலும் நீண்ட தூரங்களிலும் சிதறின". அதனால் அருகிலிருந்த பொருட்கள், குறிப்பாக பல் துலக்கப் பயன்படும் ப்ரஷ்கள் கூட சிறுநீரால் பாதிக்கப்படுவதை 2013-ஆம் ஆண்டு அமெரிக்க இயந்திரப் பொறியாளர்கள் குழு கண்டறிந்தது.

சில கலாசாரங்கள் ஆண்கள் அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிக்க ஊக்குவிக்கின்றன என்பது உண்மை தான். உதாரணமாக, இஸ்லாத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து பின்பற்றப்படும் நடைமுறைகளின் ஒரு பகுதியான சுன்னாவில் கூட அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிக்கும் முறை பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான ஆண்களுக்கு வழக்கமான பழக்கம் மாறுவதில்லை. நின்றபடியே சிறுநீர் கழிப்பதுதான் இன்னும் "வசதியான"வழியாக உள்ளது.

2023 ஆம் ஆண்டு, ஆண்கள் சிறுநீர் கழிக்க விரும்பும் முறையைப் பற்றி யூகவ், 13 நாடுகளில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில், இது தொடர்பாக கண்டங்களுக்குள் கூட பெரிய வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது.

ஜெர்மனியில் 40% ஆண்கள் எப்போதும் அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிப்பதாகவும், 10% பேர் மட்டுமே எப்போதும் நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதாகவும் கூறினார்கள். ஆனால் பிரிட்டனில் இந்த சதவீதங்கள் முறையே 9% மற்றும் 33% ஆக மட்டுமே இருந்தன.

விசித்திரமாக, அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஜெர்மனியில் அதிகமாகக் காணப்படுகிறது. அங்கு ஒருவரை 'சிட்ஸ்பிங்க்லர்' (அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிக்கும் ஆண்) என்று அழைப்பது, ஆண்மையற்ற நடத்தையாகக் கருதப்படுகிறது. பிரேசிலில், அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிப்பது "பெண்களுக்கும் தவளைகளுக்கும் உரியது" என்று பழைய சொற்றொடர் குறிப்பிடுகிறது.

ஆண்கள் சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றுவதற்கு, ஏதேனும் பரிணாமப் பண்புகளுடன் போராட வேண்டியிருக்கிறதா என்றால், பரிணாம உளவியலின் முன்னணி நிபுணரான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முனைவர் ராபர்ட் டன்பார் அப்படி இல்லை என்கிறார்.

"ஆண்கள் ஏன் நின்றபடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்பதை பரிணாம ரீதியாக விளக்குவதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை," என்றும் அவர் கூறுகிறார்.

அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காக ஆண்கள் பயன்படுத்தி வந்த காரணங்கள் எதுவும் இனி செல்லுபடியாகாது.

"உண்மையில், சில ஆண்களுக்கு நின்றபடி சிறுநீர் கழிப்பது வசதியாக இருக்கும். சிலருக்கு அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிப்பது வசதியாக இருக்கும்," என்று முனைவர் கார்த்வைட் கூறுகிறார்.

தெளிவான மருத்துவ ஆலோசனை இல்லாத நிலையில், ஆண்களுக்கு உலகம் முழுவதும் சிறுநீர் கழிக்கும் முறை ஒரு தனிப்பட்ட தேர்வாகவே இருக்கும். ஆனால், பெண்கள் தரும் அழுத்தம் அல்லது கழிப்பறை சுவற்றில் ஒட்டப்படும் அறிவிப்புகள் (ஜெர்மனியில் காணப்படும் மற்றொரு தனித்துவமான பழக்கம்) போன்ற காரணிகள் அவர்களை அமர்ந்துகொண்டே சிறுநீர் கழிக்கத் தூண்டக்கூடும்.

ஆனால் நீங்கள் நின்றபடியே சிறுநீர் கழிக்கப் போகிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் துல்லியமாக குறிவைக்க முயற்சி செய்யுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.