சென்னையின் போக்குவரத்தை அடுத்த 25 ஆண்டுகளில் முழுமையாக மாற்றுவதற்கான ‘விரிவான போக்குவரத்து திட்டம்’ (CMP) குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மாஸ்டர் பிளானில், ஏராளமான புதிய வசதிகளோடு ஏர் டாக்சி சேவை முதல் வாட்டர் மெட்ரோ, டிராம், மெட்ரோ விரிவாக்கம், புதிய பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல பெரிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
CUMTA நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, சென்னை துறைமுகம்–பரந்தூர்–மாமல்லபுரம்–திருப்பதி வழித்தடத்தை மையமாக கொண்டு மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் ஓடும் ஏர் டாக்சி சேவை உருவாக்கப்படும். 4 முதல் 8 பயணிகள் வரை செல்லும் சிறிய ரக விமானங்கள் மூலம் இது செயல்படுத்தப்படும்.
மெட்ரோ சேவையில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தற்போதைய 172 கி.மீ. மெட்ரோ பாதை 2048 ஆம் ஆண்டில் 444 கி.மீ. ஆக விரிவாக்கப்படும். அதேபோல் 152 கி.மீ. மெட்ரோ லைட் நெட்வொர்க்கும் உருவாக்கப்படும்.
30 புதிய பஸ் டிப்போக்கள், 346 புதிய பேருந்து நிறுத்தங்கள், 438 கி.மீ. தூரத்தில் பேருந்து விரைவு போக்குவரத்து அமைப்பு (BRTS) அறிமுகப்படுத்தப்படும். கோயம்பேடு–பூந்தமல்லி, பல்லாவரம்–குன்றத்தூர், வண்டலூர்–கேளம்பாக்கம் வழித்தடங்களில் நியோ மெட்ரோ சேவை அமையும்.
புறநகர் ரயில் சேவையில் 182 கி.மீ. புதிய பாதைகள் அமைக்கப்படுகின்றன. எண்ணூர்–சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்–காஞ்சிபுரம் வழித்தடங்களிலும் புது ரயில் சேவை வர உள்ளது.
சென்னையில் பழமையான டிராம் சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தி.நகர்–நுங்கம்பாக்கம்–நந்தனம்–லைட் ஹவுஸ் இடையே டிராம் இயங்கும்.
சென்ட்ரல்–கோவளம்–மாமல்லபுரம் வழியில் வாட்டர் மெட்ரோ இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
இந்த CMP திட்டத்திற்கு மூன்று கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:
2030க்குள் ₹75,976 கோடி, 2040க்குள் ₹95,777 கோடி, 2048க்குள் ₹40,768 கோடி.
மொத்தத்தில், இந்த மாஸ்டர் பிளான் செயல்படுத்தப்பட்டால் சென்னை நகரத்தின் போக்குவரத்து முகமே மாற்றப்பட்டு, நவீன உலகத் தரத்துக்கு நகரம் உயர்வதை நிபுணர்கள் கூறுகின்றனர்.