அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிப் பேசி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. “ஆன்லைனில் முதலீடு செய்தால் உடனே இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறி, முதலில் சிறிய தொகையைப் பரிசோதனைக்கு வழங்கி முதலீட்டாளர்களை நம்ப வைப்பார்கள்.
அதை நம்பி அதிக தொகையை முதலீடு செய்பவர்களின் பணத்தை மொத்தமாகச் சுருட்டிவிடும் மோசடிக் கும்பல்கள் செயல்படுகின்றன. அப்படியான ஒரு சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் ₹25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒரு பெண்னைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த 44 வயதான சுதா கார்த்திக் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர் மற்றும் தொழில் அதிபர், சமீபத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் முதலீடு மோசடி குறித்துப் புகார் அளித்திருந்தார். அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்புகொண்ட மர்ம நபர், ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி, தான் ரூ.25 லட்சம் முதலீடு செய்து மோசமடைந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த மோசடியில் முக்கியக் குற்றவாளியாகச் செயல்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான தீபா என்ற பெண்ணைக் கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்த தீபா, மோசடிக் குற்றவாளிகளுக்குத் துணையாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.