எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு அண்மையில் குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதனையடுத்து இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் 'வாரணாசி' படத்தின் தலைப்புக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
குளோப்டிரோட்டர் நிகழ்வில் அனுமன் குறித்து ராஜமவுலி பேசியது சர்ச்சையாகியுள்ளது. அது குறித்து அவர் மீது ஹைதராபாத் காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட்டுள்ளது. இந்நிலையில், 'வாரணாசி' படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, இந்த தலைப்பை கடந்த 2023-ஆம் ஆண்டே ராமா பிரம்மா ஹனுமா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்து வைத்துள்ளது. இது தொடர்பான கடிதம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட இந்த தலைப்பை கடந்த ஜூன் மீண்டும் அந்த நிறுவனம் புதுப்பித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை வரை நீடிக்கும். எனினும் ராஜமவுலி படத்தின் தலைப்புக்கு ஆங்கிலத்தில் வேறு ஸ்பெல்லிங் இருக்கிறது. இந்த தலைப்பு தொடர்பாக ராஜமவுலி படக்குழு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகினார்களா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாவில்லை.
ஏற்கெனவே, அனுமன் குறித்து சர்ச்சையாக பேசியதால், இந்து அமைப்புகள் ராஜமவுலி மீது புகாரளித்துள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய சிக்கல் உருவாகியிருப்பது படக்குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.