பெரும் சோகம்..! சபரிமலையில் பெண் பக்தர் உயிரிழப்பு..!
Top Tamil News November 20, 2025 02:48 PM

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது முதலே கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து கோயிலில் பக்தர்களின் கூட்டம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.


சபரிமலையில் வழக்கமாக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால், நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்பு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டது.


கூட்ட நெரிசல் காரணமாக நேற்று 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பம்பையிலும் கூட்டம் அதிகமாவதால் நேற்று மாலையில் நிலக்கல்லில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இதனிடையே நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். அதாவது, கேரள மாநிலம் கோழிக்கோடு எடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சதி (வயது59). இவர் நேற்று காலை தனது கணவர் மற்றும் அய்யப்ப குழுவினருடன் சபரிமலைக்கு வந்தார். இந்த குழுவினர் பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை கணவர் மற்றும் சக பக்தர்கள் மீட்டு பம்பையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலை பாதுகாப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் கூறியதாவது:-

சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். முதல் நாள் தரிசனம் செய்யும் பக்தர்கள் மறுநாள் நெய்யபிஷேகம் முடிந்த பின்னரே மலை இறங்குகிறார்கள். இதன் காரணமாக சன்னிதானம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகிறார்கள்.

சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த சாமி தரிசனம் செய்த பக்தர்கள் உடனடியாக மலை இறங்க வேண்டும்.

உடனடி தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க முடியும். இதனால் தரிசனத்திற்கு கால தாமதம் ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பயண திட்டத்தை அமைக்க வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் அந்த நாளில்தான் தரிசனம் செய்ய வரவேண்டும். முன்கூட்டியே சபரிமலைக்கு வருவதை தவிர்க்கவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.