``உங்கள் 20-களில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" - ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!
Vikatan November 20, 2025 12:48 PM

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில், `இளைஞர்கள் தங்கள் 20-களில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்' எனப் பதிவிட்டிருக்கிறார்.

அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவரும் நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஶ்ரீதர் வேம்பு

அதில் "அண்மையில் நான் IIT ஹைதராபாத் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது யார் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று கேட்டபோது பெண்களை விட அதிகமான ஆண்கள் கைகளை உயர்த்தினர்.

ஆனால் மாணவிகளுடன் உரையாடியபோது திருமணத்திற்கு முன்னர் நிதி ரீதியாக தாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், நிதி ரீதியான சுதந்திரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ``நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்கள் 20-களில் குழந்தைகளைப் பெற வேண்டும்.

அதைத் தள்ளிப்போட வேண்டாம் என்றும் நான் அறிவுறுத்துகிறேன். அவர்கள் சமூகத்திற்கும் தங்கள் சொந்த மூதாதையர்களுக்கும் தங்கள் மக்கள் தொகை அதிகரித்து தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

ஶ்ரீதர் வேம்பு

இந்தக் கருத்துக்கள் பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் அவை மீண்டும் வரும் என்று நான் நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஶ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து, அவரின் கருத்துக்கு எதிரான வாதங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

ஒரு பயனர் தன் எக்ஸ் பதிவில், ``இன்றைய இளைஞர்கள் உழைப்பதற்குப் பயப்படுவதில்லை. நிலையற்ற சம்பளம், பூஜ்ஜிய வேலை, வாழ்க்கை சமநிலையின்மை, வருமானத்தில் 40% சாப்பிடும் வாடகை ஆகிய காரணங்களால் ஒரு குடும்பத்தை உருவாக்க பயப்படுகிறார்கள். இது ஒரு மக்கள்தொகை நெருக்கடி அல்ல. இது ஒரு பொருளாதார நெருக்கடி" என்றார்.

இன்னொரு பயனர்,``20 வயது காலக்கட்டம் வாழ்க்கைத் துணை தேடுவதற்கான வயதல்ல. அது உங்களைப்பற்றி நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வயது. அப்படி நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், அதற்குப் பிறகான வாழ்க்கையில் நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்கப்போகும் ஒரு இயந்திரமாக மாறிவிடுவீர்கள்" என்றார்.

Bihar அரசியலும் Maharani Webseries-ம் | MODI வெறுப்பில் உறுதியாக இருந்த Nitish Kumar மாறியது எங்கே?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.