சொந்த ஊருக்கு போகணுமா..? தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
Top Tamil News November 20, 2025 09:48 PM

நாளை வெள்ளிக்கிழமை (21/11/2025), சனிக்கிழமை (22/11/2025) மற்றும் ஞாயிற்றுக் கிழமை (23/11/2025) முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை மறுநாள் 340 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மறுநாள் 55 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து நாளை மறுநாள் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9,556 பயணிகளும் சனிக்கிழமை 3,732 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,635 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.