"தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை" - நடிகை மான்யா விளக்கம்!
Vikatan November 20, 2025 09:48 PM

நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது.

இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.