தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘இலக்கிய மாமணி விருதுகள்’ இன்று (நவ.20) வழங்கப்பட்டன.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 2021-ல் உருவாக்கப்பட்ட இந்த விருதுகள், மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ.ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க.சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
விருதிற்கான ₹5 லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, முதலமைச்சர் அவர்களைப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார்.