சென்னை, நவம்பர் 20, 2025: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், 4 தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து பாமக பொருளாளர் திலகபாமா ஆதரவு வழங்கினார். மண்டலம் 5 மற்றும் 6 யை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இரண்டு மண்டலங்களிலும் தனியார் மையத்தை கைவிட வேண்டும் பழைய முறைப்படி தங்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை ரிப்பன் மாளிகை வெளியே மேற்கொண்டனர்.
தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்:சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த முயன்றபோதும் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் 100வது நாள் போராட்டத்தை முன்னெடுக்க திட்டம் இருந்தது. சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தரப்பில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், தமிழக அரசு தரப்பில் தூய்மை பணியாளர்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மேலும் படிக்க: பேட், விசில், பந்து.. பொது சின்னம் கோரும் த.வெ.க.. இந்த சின்னங்கள் கோர என்ன காரணம்?
3 வேளை உணவு உள்ளிட்ட நலத்திட்டங்கள்:அதாவது, சென்னையில் நவம்பர் 16, 2025 முதல் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக ஆயிரம் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக பெருங்குடி பகுதியில் 510 குடியிருப்புகள் மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் 490 குடியிருப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல்வர் அதற்கான ஆணைகளையும் வழங்கினார். தூய்மை பணியில் ஈடுபடும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோல ஆறு திட்டங்கள் தூய்மை பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: பராமரிப்பு பணிகள் காரணமாக 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து.. இயக்கப்படும் 17 சிறப்பு ரயில்கள்.. முழு விவரம்..
உண்ணாவிரத போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்:இருந்தபோதிலும், தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய இரண்டையும் இதுவரை பரிசீலனை செய்யவில்லை. இதன் காரணமாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அம்பத்தூரில் 4 பேருக்கு மட்டும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நியாயமான கோரிக்கை நிறைவேற்ற தவறுவது ஏன் – திலகபாமா:ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி ஆகிய நான்கு பெண்களும் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் பாமக பொருளாளர் திலகபாமா அவர்களை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்து கோஷம் எழுப்பினார். தேர்தல் வருகின்ற நேரத்தில் மட்டும் அப்பா மற்றும் அண்ணன் வேடமிடும் முதலமைச்சர் ஸ்டாலின் எளிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென திலகபாமா தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் திமுக அரசு தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத்தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.