இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்... போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது!
Vikatan November 21, 2025 09:48 AM

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் (இனாம் நிலம்) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

protest

கடந்த 17- ம் தேதி வெண்ணைமலை கோயில் முன்பு அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் இனாம் நிலத்தில் உள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, 62 கடைகள், ஒரு செல்போன் டவர் ஆகியவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிட திட்டமிட்டு இருந்தனர்.

அதன்படி, இன்று கண்ணம்மாள் என்பவர் வீட்டிற்கு சீல் வைக்க சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பா.ம.க மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அப்பகுதி மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸார் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். பாதுகாப்பு பணிக்காக கரூர் மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களில் ஒரு பகுதியினர், மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல் நகர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்கள் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது.

arrest

வாகனங்கள் 1 கி.மீ வரை நின்றன. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு அனைவரையும் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இனாம் நிலம் தொடர்பான அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிராக போராடி வரும் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.