டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) அறிவித்துள்ள நிலையில், இது குறித்து அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணையில், இத்தாக்குதலின் முக்கியக் குற்றவாளி காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி என்று கண்டறியப்பட்டதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி கொடுத்ததாக அமீர் ரஷீத் அலி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னர் உமர் பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், தற்கொலைப் படைத் தாக்குதலை அவர் "தியாக நடவடிக்கை" என்று நியாயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒவைசி, "இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது ஹராம், அப்பாவிகளைக் கொல்வது ஒரு பெரிய பாவம். இது பயங்கரவாதம், வேறு எதுவும் இல்லை" என்று உமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கேள்வி எழுப்பிய அவர், "ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மகாதேவின் போது, கடந்த ஆறு மாதங்களில் எந்த உள்ளூர் காஷ்மீரியும் பயங்கரவாதக் குழுக்களில் சேரவில்லை என்று அமித் ஷா நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.
இந்தக் குழு எங்கிருந்து வந்தது? இந்தக் குழுவைக் கண்டறியத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.