மீன் பிடிக்க விரித்த வலையில் சிக்கிய முதலை குட்டி.. சிதம்பரத்தில் பரபரப்பு!
TV9 Tamil News December 08, 2025 05:48 AM

கடலூர், டிசம்பர் 07 : கடலூரில் (Cuddalore) குளத்தில் கிராம மக்கள் வலை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்த நிலையில், வலையில் முதலை குட்டி (Crocodile) ஒன்று சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் கிராம மக்கள் தூண்டிகல்கள் போட்டும், வலை விரித்தும் மீன் பிடிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் விரித்த வலையில் முதலை குட்டி சிக்கிய சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீன் பிடிக்க விரித்த வலையில் சிக்கிய முதலை குட்டி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் கிராமத்தில் உள்ள குளத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சில பொதுமக்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்கள் மீன் பிடிக்க குளத்தில் வலை விரித்த நிலையில், அந்த வலையில் மீனுக்கு பதிலாக முதலை குட்டி ஒன்று சிக்கியுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதனை வலையுடன் சேர்த்து லாவகமாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க : நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – 4 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ் – என்ன நடந்தது?

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறை

முதலை குட்டியை கரைக்கு கொண்டு வந்த பொதுமக்கள் அது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் முதலையை மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர். பொதுமக்களின் வலையில் சிக்கிய அந்த முதலை 5 அடி நீளமும், 30 கிலோ எடையும் கொண்டு இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : டெல்டா, தென் தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் மழை இருக்காது – வெதர்மேன் பிரதீப் ஜான்

ராட்சத முதலையை பிடிக்க கோரிக்கை வைத்த பொதுமக்கள்

முதலையை பிடிக்க வந்த வனத்துறையினரிடம் அந்த பகுதியில் ஒரு ராட்சத முதலை சுற்றித் திரிவதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கேட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.