நாடு முழுவதும் தேடப்பட்ட நக்சல் தலைவன் ஒருவனை பிடித்துக் கொடுத்தால் ரூ.77 லட்சம் வெகுமதி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், குறித்த நக்சல் தலைவன் தானாக முன்வந்து மத்திய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் சரண் அடைந்துள்ளான்.
2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சல்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ள நிலையில், பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை எதிர்கொள்ள முடியாமல், வன்முறையை கைவிட்டு ஏராளமான நக்சல் தலைவர்கள், அதன் இயக்கத்தினர் சரண் அடைந்து வருகின்றனர்.

அதன்படி, நாடே தீவிரமாக தேடி வரும் முக்கிய நக்சல் தலைவனை பிடித்து கொடுக்க, ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நிலையில், சுரேந்தர் (எ) கபீர் என்ற நக்சல் தமது கூட்டாளிகளுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பாதுகாப்பு படை முன்பு சரண் அடைந்துள்ளான். இவனுடன் 10 பேரும் சரண் அடைந்திருக்கின்றனர்.
தமது நம்பிக்கைக்குரிய வனக்காவலர் ஒருவர் மூலம் பாதுகாப்பு படையினருடன் பேச்சு வார்த்தை நடத்திய சுரேந்தர் முதலில் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைவதாக திட்டமிட்டு இருந்துள்ளான்.
ஆனால், ம.பி. பாதுகாப்பு படையினர் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியதில் விளைவாக, பாலகாட் பகுதியில் உள்ள ஐஜியின் அதிகாரப்பூர்வ பங்களாவில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் இன்று (டிசம்பர் 07) 04 பெண்கள் உட்பட 10 நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்துள்ளனர். சுரேந்தர் உள்ளிட்டோர் இரு குழுக்களாக ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர்.

சரணடையும் போது தாங்கள் வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள், நவீன ஏகே 47 ரக துப்பாக்கிகள், அதற்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், டெட்டனேட்டர் வெடி பொருட்களை அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
சுரேந்தர் உடன் அவனின் நெருங்கிய கூட்டாளியான ராகேஷ் ஹோடி என்பவனும் சரண் அடைந்துள்ளான். இந்த சரண் நடடிவக்கையின் மூலம், மாண்ட்லா மாவட்டம், நக்சல்கள் இல்லாத மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாலகாட்டில் பெண் நக்சல் சரண் அடைந்த ஒரு மாதம் ஆகிறது. இதன் பின்னர் இந்த நிகழ்வு நடந்துள்ளது. நக்சல்களுக்கு புதிய மறுவாழ்வு என்ற அரசின் அறிவிப்புக்கு பின்னர், நடைபெற்ற மிக பெரிய சரண் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.