கே.ஆர். வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் உருவான ‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. லெனின்–அஸ்மின் ஜோடி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, பாடகி சின்மயியை கடுமையாக விமர்சித்தார். ‘ரெட் லேபில்’ படத்தில் சின்மயி பாடியிருந்தும், இசை வெளியீட்டு விழாவிற்கு வராதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில்,“ஒரு பாடகி பாடும்போது, அந்தப் பாடல் எந்த சூழலில் வருகிறது, என்ன வரிகள் உள்ளன என்பது தெரிய வேண்டும். வரிகள் சரியில்லையெனில் முன்பே கூறலாம். பாடி விட்டு, படத்தின் வியாபாரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக பேசுவது தவறு. ‘இயக்குநர் யார் என்று தெரியாமல் பாடிவிட்டேன்’ என்சொல்வது அந்த இயக்குநரை அவமானப்படுத்துவது. இது மோகனுக்கு மட்டும் அல்ல, தமிழ் சினிமாவின் அனைத்து இயக்குநர்களுக்கும் அவமானம். ஒரு படத்தை வெளியிட எடுக்கும் உழைப்பை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்,” என்று சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் நடிகர்–நடிகைகளின் கேமிஸ்ட்ரி குறித்து பேசிய பேரரசு,“கதாநாயகன் லெனினை பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை; அனுபவமுடையவரைப் போல இருக்கிறார். லெனின்–அஸ்மின் ஜோடி கமல்–ஸ்ரீதேவி, ரஜினி–ஸ்ரீபிரியா ஜோடிகளை நினைவூட்டும் வகையில் அழகாக உள்ளது. இந்த ஜோடி தொடர்ந்தும் நடிக்க வேண்டும்,” என பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரரசுவின் சின்மயியை குறித்த கூற்றுகள் தற்போது திரையுலகில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.