இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய 'டிட்வா' புயல்: 627 ஐ தாண்டிய உயிரிழப்புக்கள்; 190 பேர் மாயம்..!
Seithipunal Tamil December 08, 2025 06:48 AM

நமது அண்டை தீவு நாடான இலங்கையில், 'டிட்வா' புயல் கோரத்தாண்டவம் ஆடியதால் அந்நாட்டு முற்றிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 'டிட்வா' புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஐ தாண்டியுள்ள நிலையில், மாயமான 190 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சுனாமி பேரழிவை அடுத்து, இதுவரை அந்நாட்டில் இவ்வாறான பேரிழப்பு மற்றும் சேதம்  ஏற்பட்டதில்லை. இந்த அசாதார சூழ்நிலையால் அந்நாட்டு ஸ்தம்பித்து போயுள்ளது. நம் நாடு 'ஆப்பரேஷன் சார்பந்து' என்ற திட்டத்தின் கீழ் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், நடமாடும் மருத்துவமனை, தற்காலிக பாலம் போன்றவற்றுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மோப்ப நாய்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர்.

 

அத்துடன், நடமாடும் மருத்துவமனைகள் மூலம் 1,250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 05 பெரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 03 இரும்புப் பாலம் அமைத்து கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், 'டிட்வா' புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஐ தாண்டியுள்ளது. அந்நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் வசிக்கும் ஆறு லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 21.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய 190 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. சேதம் அடைந்த வீடுகளின் குறித்த கணக்கெடுப்பு நாளை தொடங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.