நெல்லை டவுன் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடைகளை ஏலத்தில் எடுத்த வியாபாரிகள், விற்பனை குறைவாக இருந்ததால், மீண்டும் மாநகராட்சியிடமே கடைகளின் சாவியை திருப்பிக் கொடுத்துள்ளனர்.
ஆனால் வியாபாரிகள் அளித்த தலா 8 லட்சம் ரூபாய் டெபாசிட் பணத்தை மாநகராட்சி நிர்வாகம் திரும்பக் கொடுக்காமல் இருந்து வருகிறது. மேலும், சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடைகளுக்கான வாடகையை குறைக்க வலியுறுத்தியும், டெபாசிட் பணத்தை வழங்கக் கோரியும் பாஜக மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் மேயருமான புவனேஸ்வரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, வியாபாரிகள் தரையில் உருண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதுகுறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.