கேரளாவில் கடந்த 09 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவனந்தபுரம் பகுதியில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சையத் அலி மஜீத் 47 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையொட்டி நடந்த வெற்றி பேரணியின் போது, அவர் பெண் வேட்பாளர்களை முன்னிறுத்திய முஸ்லிம் லீக் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:
முஸ்லிம் லீக் கட்சி ஓட்டுக்காக ஒரு கட்சி பெண்களை களமிறக்கியது. பெண்களை காண்பித்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தது. ஆனால் பலிக்கவில்லை என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன், நம் வீட்டிலும் திருமணமான பெண்கள் இருக்கின்றனர். ஓட்டுக்காக அவர்கள் வீட்டிலேயே கௌரவமாக அமர்ந்து இருக்கட்டும். பெண்களை திருமணம் செய்வது சமையல் செய்யவும் குழந்தைகள் பெற்றுப் போடவும் மட்டுமே. அவர்களை நாம் காட்சி பொருளாக்கவில்லை என்று ஆபாசமாக பேசியுள்ளார்.
அதனால்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களின் போது, பெண்ணின் பின்னணி பற்றி தீர விசாரிக்கின்றனர் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முஸ்லிம் லீக் மட்டு மின்றி, தன் சொந்த கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் உள்ள பெண்கள் பற்றியும் சையத் அலி மஜீத் தரக்குறைவாக விமர்சித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.