தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, குமாரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
குறித்த பள்ளிகள், தமிழ் கற்றல் சட்டம், 2006ஐ மீறாது எனக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்கும்படி 2017, செப்டம்பர் 11-இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அதனபடி, கடந்த 2017, டிசம்பர் 11-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பல ஆண்டுகள் குறித்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே இருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 02-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர், வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி நாகரத்னா நீங்கள் நமது இந்திய குடியரசின் அங்கம் இல்லையா..? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், எங்கள் மாநிலம், எங்கள் அரசு என்று தயவு செய்து யாரும் சொல்லாதீர்கள். இது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நாடு. இங்கு மத்திய அரசு, மாநில அரசும் எல்லா விஷயத்திலும் அமர்ந்து பேசி தீர்வை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஹிந்தி திணிப்பை செய்வதால் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ராகரத்னா, தயவு செய்து தமிழகத்தில் மாணவர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் வில்சன்; 'தயவு செய்து தமிழகத்தில் அவ்வாறு நடப்பதாக சொல்லாதீர்கள். நாட்டிலேயே அதிகளவில் மாணவர்கள் பள்ளி சேர்க்கையை தமிழக அரசு தான் மேற்கொண்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசிடம் கல்வி நிதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மத்திய அரசை அணுகி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதுதானே என்றும், தமிழக அரசு அதிகாரிகளை மத்திய அரசிடம் அனுப்பி பேச வைக்க வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பதற்கான இடங்களை 06 வார காலத்துக்குள் கண்டறியும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.