மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எலித் தொல்லையானது, நோயாளிகளின் சிகிச்சையைவிட அதிக பயத்தையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் பொதுச் சுகாதாரப் பேரழிவாக மாறியுள்ளது.
இந்தூர் மகாராஜா யஷ்வந்தராவ் மருத்துவமனை மற்றும் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரிக்குப் பிறகு, தற்போது ஜபல்பூர் மாவட்ட மருத்துவமனையிலும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது. எலும்பு முறிவு வார்டுக்குள் எலிகள் சுதந்திரமாக ஓடித் திரிவது, படுக்கைகள் மற்றும் உணவுக் கலன்களில் ஏறி அட்டகாசம் செய்வது காணொளியாகப் பதிவாகியுள்ளது.
இந்த எலித் தொல்லை நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பதாக மாறியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர், மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான இந்தூர் மகாராஜா யஷ்வந்தராவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இரண்டு பச்சிளங் குழந்தைகளை எலிகள் கடித்ததில், குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூரமான சம்பவங்களைத் தொடர்ந்து, அலட்சியம் காட்டிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தகைய சம்பவங்கள், அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்புணர்ச்சியின் மீது தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.