வட மாநிலங்களை பனிமூட்டம் ஆட்கொண்டுள்ள நிலையில், அதன் கோர முகம் இன்று வெளிப்பட்டது. டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக பார்வைத் தூரம் குறைந்து, அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.இந்த சூழலில், டெல்லி–ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் மதுரா அருகே, கடும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாமல் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின.
மோதிய வேகத்தில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால், சாலை முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.இந்த விபத்தில் 8 பேருந்துகள், 3 கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 75 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து வட மாநிலங்களில் நிலவும் பனிமூட்டம் எவ்வளவு அபாயகரமானது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.