சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்னை தலைமைக்கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்களது பெயரிலும் விருப்ப மனுக்கள் அளிப்பதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
இதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்,“கடந்த 54 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் முன்னணியில் இருந்த இயக்கம் அ.தி.மு.க. தான். எம்.ஜி.ஆர். காலம் முதல் அம்மா காலம் வரை மக்கள் ஆதரவுடன் வெற்றி நடைபோட்ட இயக்கம், இன்று அந்த இரு பெரும் தலைவர்களின் அரசியல் வடிவமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது” என்றார்.
மேலும், “தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி 175 தொகுதிகளில் 12,000 கிலோமீட்டர் பயணம் செய்து, பச்சை பேருந்தில் ஒரு கோடி மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் அரசியல் வரலாற்றில் ஒரு சாதனை. இதை யாராலும் முறியடிக்க முடியாது” என குறிப்பிட்டார்.விருப்ப மனுக்கள் குறித்து பேசிய அவர்,“முதல் நாளிலேயே 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
234 தொகுதிகளில் 349 தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். தற்போது அம்மா பேரவை சார்பில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் அவர் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுக்கள் அளிக்க உள்ளோம். மதுரையில் எந்த தொகுதியில் நின்றாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்” என்றார்.
தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர்,“சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க 2026 தேர்தலில் மக்கள் தயாராகிவிட்டனர். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும். இதை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் அச்சத்தில் உள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சிக்கும் தி.மு.க., இன்று சுவாசம் இல்லாத கட்சியாக மாறியுள்ளது. செயற்கை விளம்பரங்களால் உயிர் கொடுக்க முயல்கிறார்கள். ஆட்சி முடிவடைய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு அறிவிப்பது அரசியல் நாடகம் மட்டுமே” என்றார்.
இறுதியாக,“அ.தி.மு.க.-வின் ஒரே எதிரி தி.மு.க. தான். வருகிற சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்ற நேரடி போட்டியாக இருக்கும். ஆயிரம் ஸ்டாலின்களும், லட்சம் உதயநிதிகளும் வந்தாலும் வெற்றி பெறுவது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான்” என்று ஆர்.பி.உதயகுமார் உறுதியாக தெரிவித்தார்.