லிங்க் திறந்ததுதான் தவறு: ஆன்லைன் வர்த்தக மோசடியில் ரூ.11.46 லட்சம் இழப்பு...! நடந்தது என்ன...?
Seithipunal Tamil December 16, 2025 03:48 PM

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் அவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு, “ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம்” என்ற கவர்ச்சிகரமான தகவலுடன் ஒரு செய்தி வந்தது.

அதில் இருந்த இணைப்பை (லிங்க்) அவர் திறந்து பார்த்தபோது, ஆன்லைன் முதலீடு தொடர்பான விவரங்கள் காட்டப்பட்டன.சிறிது நேரத்தில், அவரது செல்போன் எண் ‘வென்ட்செக் புரோ’ என்ற பெயரிலான வாட்ஸ்-அப் குழுவில் தானாகவே சேர்க்கப்பட்டது.

அந்தக் குழுவில் இருந்த நபர்கள், ஆன்லைன் முதலீடு செய்வது எப்படி, அதனால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது, தங்களுக்கு கிடைத்த வருமான விவரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய பேராசிரியை, கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் இந்த மாதம் 9-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில், அந்த குழுவில் வழங்கப்பட்ட ஆன்லைன் கணக்குகளில் மொத்தம் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் முதலீடு செய்துள்ளார்.

முதலீட்டுக்கு பதிலாக சுமார் ரூ.1.5 லட்சம் கமிஷன் கிடைத்ததாக அவரது கணக்கில் காட்டப்பட்டதால், அவர் மேலும் நம்பிக்கை கொண்டார்.சில நாட்களுக்கு முன்பு, முதலீடு செய்த தொகையும் கமிஷனும் திரும்பப் பெற முயன்றபோது, பணத்தை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து வாட்ஸ்-அப் குழுவில் கேட்டதற்கு, “மேலும் கூடுதல் தொகை முதலீடு செய்தால் மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும்” என அந்த குழுவில் இருந்தவர்கள் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர், நண்பர்களிடம் விசாரித்தபோது, ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி மர்மநபர்கள் ரூ.11 லட்சத்து 46 ஆயிரத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை, வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பகுதிநேர வேலை, பங்குச் சந்தை முதலீடு, ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூக வலைதளங்களில் பார்த்து பொதுமக்கள் பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.