கார்த்திகை கடைசி முகூர்த்தம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!
Seithipunal Tamil December 15, 2025 09:48 AM

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான வரும் டிசம்பர் 15, திங்கட்கிழமை அன்று, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் அதிகமாக நடைபெறும் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஒதுக்கீடு விவரங்கள்:
ஒரு சார் பதிவாளர் அலுவலகம்: 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

இரண்டு சார் பதிவாளர்கள் அலுவலகம்: 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

'தட்கல்' டோக்கன்கள்:
அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் சேர்த்து மொத்தம் 16 தட்கல் டோக்கன்களும், 150 சாதாரண டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதன்மூலம் தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதி மட்டும் சுமார் 1,500 டோக்கன்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அன்று அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என்பதால், ஒவ்வொரு அலுவலகத்திலும் பொதுமக்கள் அமருவதற்காக கூடுதல் நாற்காலிகள் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.