மார்கழி மாதம் டிசம்பர் 16ம் தேதியன்று காலை 04.27 மணிக்கு பிறக்கிறது. சூரிய பகவான், ஒன்பதாவது ராசியான தனுசு ராசியில் இந்த சமயத்தில் தனது பயணத்தை துவக்குவார்.
மார்கழி மாதத்தில் திருமணம், வளைகாப்பு, புதிய தொழில் துவங்குவது, புதிய வீட்டிற்கு குடிபோவது உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய மாட்டார்கள். இவற்றை தவிர்த்து, தெய்வ வழிபாட்டிலும், விரதம், மந்திர ஜபம் போன்ற ஆன்மீக பணிகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
அதாவது, மார்கழி மாதத்தில் சூரியன் பயணிக்க துவங்கும் தனுசு ராசி, குரு பகவானின் ஆட்சி வீடாகும். மங்களகாரகன் என சொல்லப்படும் குருவின் வீட்டில் சூரியன் நுழையும் போது சூரியனின் பலம், ஆற்றல் குறைந்து காணப்படும். குருவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். திருமணம், தொழில் ஆகியவற்றிற்கு காரணமான குரு தொடர்பான சுப காரியங்களை செய்யக் கூடாது என்கிறார்கள். குறிப்பாக மூன்று காரியங்களை மட்டும் மார்கழி மாதத்தில் செய்யவே கூடாது. அப்படி செய்வதால் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் ஆகியவை பாதிக்கப்படுவதுடன், மனஅழுத்தம், நோய், பொருளாதார நெருக்கடி ஆகியவையும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
டிசம்பர் 16ம் தேதி காலை 04.27 மணி துவங்கி, ஜனவரி 14ம் தேதி பகல் 03.13 மணி வரையிலான மார்கழி மாதத்தில் புது வீடு குடியேறுவது அசுப காரியமாக கருதப்படுகிறது. புது வீடு குடியேறுவதுடன், வீடு கட்டும் பணிகளை மார்கழியில் துவங்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படுவதுடன் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.