'வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு' ங்கிறது தென் மாவட்டப் பகுதிகளில் மிகப் பிரபலமான, மக்களால் விரும்பப்படுகிற கும்மிப்பாட்டு குழுவாக இருந்து வருகிறது. கும்மிப்பாட்டு என்றாலே பெண்கள் கும்மியடிப்பதை தான் பார்த்திருக்கிறோம். கவிஞர் பாரதியே 'கும்மியடி பெண்ணே கும்மியடி...' என்று தான் பாடியிருக்கிறார். அப்படியிருக்க, ஆண்கள் குழுவாக இணைந்து 30 வருடமாக இந்த கும்மிப்பாட்டுக் குழுவை நடத்தி வருகின்றனர். இக்குழுவின் தலைமைப் பாடகரிடம் 'எந்த கோவில் கொடைனாலும் உங்க கும்மிப்பாட்டைத்தான் கூப்பிடுறாங்களாமே!' என்று கேட்டதற்கு ஆமா என்று சிரித்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார்.
தலைமைப் பாடகர் அண்ணாத்துரை
"என் பேரு அண்ணாத்துரை. தென்காசி மாவட்டம் சிவகிரி பக்கத்துல உள்ள வாசுதேவநல்லூர் தான் எங்க ஊரு. நாங்க ஒரு முப்பது வருசமா இந்த கும்மிப்பாட்டுக் குழுவை தொடர்ந்து நடத்திட்டு வர்றோம். நான் கும்மிப் பாடும்போது எனக்கு பக்கத்தில் உறுமி ஒருத்தரும், தாளம் ஒருத்தரும் அடிப்பாங்க. 15 பசங்க சுத்தி கோலாட்டத்தை வச்சி கும்மியடிப்பாங்க. நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கயில எங்க ஊர் கோவில் கொடைக்கு பூக்குழியைச் சுத்தி எங்க ஊருல உள்ள ஆண்களும் பெண்களும் 11 நாட்கள் வரை தினமும் கும்மியடிப்பாங்க.
அதை பாத்து தான் ஏன் நம்மளும் கும்மியடிக்க கூடாதுன்னு ஆரம்பிச்சது தான் வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு.
கும்மியை பெண்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் கும்மியடிப்பாங்க. நாங்க ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு மாதிரி அடிப்போம். அம்மனுக்கு ஒரு மாதிரியும் சுடலை, சப்பாணி மாடன்னு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரி கும்மியடிப்போம். அது எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருச்சு. முத ஆரம்பிக்கும் போது நாங்களே தான் ஒவ்வொரு அடியையும் உருவாக்கி கத்துக்கிட்டோம். இப்போ அடுத்தடுத்து வர்றவங்க அதை அப்படியே கத்துக்கிடுறாங்க' என்று நெகிழ்ந்து பேசிக்கொண்டிருந்த
தலைமைப்பாடகரை ஆசுவாசப்படுத்தி அக்குழுவைச் சேர்ந்த இளைஞர் ராம் நம்மிடம் பேச்சைத் தொடர்ந்தார்.
ராம்
" எங்களுக்கான சீசன்ங்கிறது 10 மாசம் வரைக்கும் இருக்கும். வருசத்துல 100 நிகழ்ச்சிக்காவது போயிருவோம். கார்த்திகை, மார்கழி மாசத்துல அய்யப்பன் சீசன்ங்கிறதுனால அந்த மாசத்துல மட்டும் எங்களை கூப்பிட மாட்டாங்க. நாங்க கும்மயடிக்கப் போகும்போது மொத்தமா எல்லாரையும் சேர்த்து 20 பேர் வரைக்கும் போவோம். நாங்க தொடர்ந்து ஒரு மூணு மணி நேரம் இடைவிடாம கும்மியடிக்கணும. பெரும்பாலும் இரவுல தான் கும்மியடிக்கணுங்கிறதால பசங்க நாங்க வேலைக்கு போயிட்டு வந்து நிகழ்ச்சிக்களுக்கு போகுறதுக்கு சரியா இருக்கு. இதுல இருந்து வருகிற வருமானமும் எங்களோட சில பொருளாதார செலவுக்கு பயன்படுது. எங்கப்பா தலைமுறைக்கு அடுத்த ரெண்டாவது தலைமுறையா நாங்க இன்ட்ரஸ்ட்னால தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கோம். இன்னும் நிறைய பேர் எங்களுக்கு ஆதரவு கொடுக்கணும்" என்று கோரிக்கை வைக்கிறார்.
வாசுதேவ நல்லூர் கும்மிப்பாட்டு குழு
ஒரு கேசட் தான் உங்களை எல்லார்கிட்டையும் சேர்த்துச்சாமே அந்த கேசட் சீக்ரெட் என்ன என்று கேட்டதற்கு,
"இந்தக் குழுவை நாங்க ஆரம்பிக்கும் போது நிறைய கோயில் கொடைகளில் நடக்கிற வில்லுப்பாட்டுக் கதைகளை கேட்டு தான் சாமிக் கதைகளை தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம்.
அந்த வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் கிட்டயும் பேசி ஒவ்வொரு சாமிக்கதைகளும் கும்மிப்பாட்டுக்கு ஏத்தப்புல எழுதி படிக்க ஆரம்பிச்சோம். எங்கயும் போகாம எங்க ஊர்களுக்குள்ளயே தான் கும்மியடிச்சிட்டிருந்தோம். வெளிய ஒரு சில ஊர்களுக்கு தான் போயிட்டு வந்தோம். நாங்க எங்களோட கும்மிப்பாட்டை பாடி கேசட் போட்டோம். அதுக்கப்புறம் தான் அதைப்பாத்துட்டு நிறைய ஊர்கள்ல இருந்து எங்களை தேடி வந்தாங்க. இன்னைக்கு அதுதான் எங்களை இங்க வரைக்கும் கொண்டு வந்திருக்கு. அந்தப் பாட்டை பாடுறேன் கேக்குறீங்களான்னு பேசிக் கொண்டிருந்த தலைமைப் பாடகர் கனத்த குரலில் நம்மிடம் பாடத் தொடங்கினார்.
"அம்மா வருவதை பாருங்கம்மா
அவ ஆடி வருவதை பாருங்கம்மா
ஆடி வரும் முப்புடாதிக்கு
ஆனந்த கும்மி அடிங்களம்மா
வாராளங் கிளி வாராளாம்
தாயி வடக்கேயிருந்துமே வாராளாம்
இந்த நிலவுக்கும் சந்தனப் பொட்டுக்கும்
இப்போ வருவாளாம் உச்சிமகாளி "
முன்னாடி 50 ரூபாய்க்கு கும்மியடிச்சோம். இப்போ 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுக்குறாங்க. திருநெல்வேலி வானொலில வருசா வருசம் கும்மிப்பாட்டுக்கு எங்களை கூப்பிடுவாங்க. நிறைய பள்ளிக்கூடங்களிலும் தலைவர்கள் பத்தி பாடுறதுக்கும் போயிட்டு வர்றோம். இப்போ மலேசியா போன்ற வெளிநாடுகளிலயும் கூப்பிடுறாங்க. ஆரம்பத்துல நிறைய பேரு என்னப்பா இப்படி கும்மியடிச்சிட்டு ஊரூரா அலையிதன்னு நிறைய பேசுனாங்க. என்னோட கலையை விடாம என்னைக்கும் விடக் கூடாதுன்னு நினைச்சி அதுக்குள்ளவே இருந்ததனால தான் இன்னைக்கும் இந்தக் கும்மி எங்களை விடாம பெரிய பெரிய இடங்களுக்கு எங்களை கொண்டு போய் சேர்க்குது." எனக் கூறி சந்தோசக் கண்ணீரோடு மனம் நிறைகிறார், தலைமை பாடகர் அண்ணாத்துரை.