'கடற்கரைக்கு அருகே வாடகை வீடு': சிட்னி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தந்தை - மகன் யார்?
BBC Tamil December 16, 2025 01:48 PM
BBC நவீத் அக்ரம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அவர்களை தந்தை மற்றும் மகன் என்று விவரித்துள்ளன.

தந்தையின் பெயர் சஜித் அக்ரம், அவருக்கு 50 வயது. மகனின் பெயர் நவீத் அக்ரம், அவருக்கு 24 வயது.

முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை போன்டை கடற்கரையில், யூத ஹனுக்கா பண்டிகைக்காக கூடியவர்கள் மீது இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த இரண்டு பேர் தனிப்பட்ட முறையிலேயே செயல்பட்டார்கள் என்றும் அவர்கள் எந்தப் பெரிய பயங்கரவாத குழுவின் பகுதியாகவும் இல்லை என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி தெரிவித்தார்

''இவர்கள் மூன்றாவது நபர் ஒருவருடன் கூட்டு சதி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஒரு பயங்கரவாத குழுவின் உறுப்பினர்களாக இருந்ததற்கும் எந்தச் சான்றும் இல்லை," என்று அவர் எபிசி தொலைக்காட்சியிடம் கூறினார். ஆனால், அவர்கள் "தெளிவாகவே பயங்கரவாத சிந்தனையால் தூண்டப்பட்டவர்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்றாவது ஒருவர் தொடர்புடையதாக காவல்துறை விசாரிக்கவில்லை என்றும், ஆனால் அந்த நபர்களின் காரில் ''வெடிகுண்டுகள் (IEDs)" கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் உறுதிப்படுத்தினார்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை ஆணையர் மெல் லென்னன், திங்கள் கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில்,'சஜித் அக்ரம் வேட்டைக்கான துப்பாக்கி உரிமம்' வைத்திருந்ததாகவும், ஒரு துப்பாக்கி கிளப்பில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறினார்.

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க்கின் கூற்றுப்படி, சஜித் அக்ரம் 1998-ல் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். 2001-ல் அவரது விசா பார்ட்னர் விசாவாக மாற்றப்பட்டது, பின்னர் அவருக்கு வசிப்பிடத் திரும்பும் விசா வழங்கப்பட்டது.

அவரது மகன் நவீத் அக்ரம் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் மற்றும் அதே நாட்டின் குடிமகன் ஆவார்.

FACEBOOK/CHRIS MINNS துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த அகமது அல் அகமது தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி, 'நவீத் அக்ரம் அக்டோபர் 2019-ல் முதன்முதலில் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு' வந்ததாகக் கூறினார்.

அந்த நேரத்தில், அவர் தொடர்ச்சியான அச்சுறுத்தலை ஏற்படுத்துவார் அல்லது வன்முறையில் ஈடுபடுவார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று மதிப்பிடப்பட்டது என அல்பனீசி கூறினார்.

இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்த துப்பாக்கிதாரிகளின் காரில் ஐ.எஸ் குழுவின் இரு கொடிகள் இருந்ததாக ஒரு மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி ஏபிசி நியூஸ் கூறியது. மேலும் அவர்கள் ஐ.எஸ் குழுக்கு ஆதரவாக செய்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

வாடகைக்கு எடுத்து தங்கிய ஆயுததாரிகள்

காவல்துறையினரின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர்கள் குற்றச் சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

கடற்கரைக்கு அருகில் அந்த குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதற்கு முன்பு, அவர்கள் சிட்னியின் புறநகர்ப் பகுதியான போன்னிரிக்கில் வசித்து வந்தனர், இது போன்டை கடற்கரையிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பிபிசி செய்தியாளர் கேட்டி வாட்சன், போன்னிரிக்கில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றார்.

அவரது கூற்றுப்படி, "காவல்துறையினர் இரவில் இந்த வீட்டில் சோதனை நடத்தினர். இங்கு வசித்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்பினர்."

துப்பாக்கியைப் பறித்த நபர்

இந்த போன்டை கடற்கரை சம்பவத்தில் வேறு ஒரு நபரும் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தவரை ஒரு நபர் துணிச்சலாக எதிர்கொண்டு அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

துப்பாக்கியைப் பறித்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடிய அகமது, அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்வது போன்ற காட்சி உள்ளது.

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அகமது, ஒரு பழக் கடை நடத்தி வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்தனர்

அகமதுவின் உறவினர் முஸ்தபா, ஞாயிற்றுக்கிழமை இரவு 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் பேசிய போது, "அவர் ஒரு ஹீரோ, 100 சதவிகிதம் அவர் ஒரு ஹீரோ. அவர் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். ஒன்று கையில், மற்றொன்று முழங்கையில்"என்று கூறினார்.

நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஹனுக்கா எனப்படும் யூத பண்டிகையை கொண்டாடுவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்திருந்ததாக காவல்துறை கூறுகிறது. அப்போது திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடந்தது. யூத சமூகத்தினரை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் கூறுகிறது.

பிபிசியால் உறுதிப்படுத்தப்பட்ட காணொளியில் ஒரு சிறிய பாலத்திலிருந்து இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுடுவதை பார்க்க முடிந்தது.

அதனைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்து ஓடுவதையும் காண முடிந்தது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.