சிதுமூஸ்வாலா கொலையாளிகளுக்கு அடைக்கலம் - செல்பி எடுப்பதுபோல் வந்து கபடி வீரர் சுட்டுக்கொலை
Vikatan December 17, 2025 08:48 AM

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத கலாசாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் குறையவில்லை. எல்லையில் பாகிஸ்தான் இருப்பதால் அடிக்கடி அங்கிருந்து துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. ட்ரோன் மூலம்கூட இவற்றை கடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் சோஹனா கோப்பை கபடிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் கபடி வீரர் கன்வர் திக்விஜய் சிங் என்பவரும் கலந்து கொண்டார். கன்வர் திக்விஜய் சிங் இந்த கபடி போட்டியை ஒருங்கிணைத்து நடத்துபவர்களில் ஒருவராக இருந்தார்.

கபடி போட்டியை காண இரண்டு பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் கூட்டத்திற்குள் படிப்படியாக முன்னேறி உள்ளே சென்றனர். அங்கு கன்வர் சகவீரர்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அடிக்கடி ரசிகர்கள் வந்து செல்பி எடுத்து சென்றனர்.

இதை பயன்படுத்திக்கொண்ட இரண்டு பேர் கன்வரிடம் செல்பி எடுக்கவேண்டும் என்று கூறி மிகவும் நெருக்கமாக சென்றனர். அவர்கள் செல்பி எடுத்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக துப்பாக்கியை சுட்டார்.

இதில் கன்வர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இத்துப்பாக்கிச்சூட்டை பார்த்து அங்கு கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரும் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டு தாங்கள் தப்பிச்செல்ல கூட்டத்தை கலைந்து போகும்படி கூறினர். பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து இரண்டு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். கீழே விழுந்து கிடந்த கன்விரை உடனே போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கன்வர் மீது 6 முதல் 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தது. அவர் ஏற்கனவே இறந்திருந்தார். சம்பவத்தின்போது முதலில் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தனர். உண்மை தெரிய வந்தபோதுதான் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து ஓடினர். இப்படுகொலைக்கு செளதரி-சகன்பிரீத் கேங்க் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் தங்களது பதிவில், இன்றைக்கு சிது மூஸ்வாலா படுகொலைக்கு பழிக்குபழி வாங்கும் விதமாக கன்வர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிது மூஸ்வாலாவை கொலை செய்தவர்களுக்கு கன்வர் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், கன்வரும் சிது மூஸ்வாலா கொலையில் ஈடுபட்டதாகவும், லாரன்ஸ் கேங்குடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.