உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் அருகே அகமதுபூர் கிராமத்தில், திருமண விவகாரம் மற்றும் பணத் தகராறு காரணமாகப் பெற்றோரைக் கொடூரமாகக் கொலை செய்த மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தாவில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட அம்பேஷ் என்ற இளைஞனுக்கும், அவரது தந்தை ஷியாம் பகதூர் மற்றும் தாய் பபிதாவிற்கும் இடையே நீண்ட நாட்களாகப் பணப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அம்பேஷ், இரும்புக் கம்பியால் இருவரையும் தாக்கி, தந்தையைத் துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர், வீட்டின் அடித்தளத்தில் இருந்த ரம்பத்தை எடுத்துத் தனது தாயின் உடலைத் துண்டு துண்டாக வெட்டிய விபரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை மறைப்பதற்காகச் சிமெண்ட் பைகளில் உடல் பாகங்களை அடைத்த அம்பேஷ், தனது காரின் மூலம் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோமதி மற்றும் சாய் நதிகளில் வீசியுள்ளார். பெற்றோரைக் காணவில்லை என்று தனது சகோதரியிடம் கூறி நாடகமாடிய அம்பேஷை, காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்தனர்.
ஜான்பூர் நகரக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆயுஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையில் நடைபெற்ற விசாரணையில், குற்றவாளி தனது செயலை ஒப்புக்கொண்டார். தற்போது வரை தந்தையின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றின் ஆழமான பகுதிகளில் மற்ற பாகங்களைத் தேடும் பணியில் மூழ்காளர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.