ஆன்லைன் மூலம் பைக் மற்றும் கார் சேவைகளை வழங்கும் ராபிடோ (Rapido) நிறுவன ஓட்டுநர் ஒருவர், பயணியை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அந்த ஓட்டுநர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியுள்ளார். ஏற்கனவே ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதவிருந்த நிலையில், “போனை வைத்துவிட்டு இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கில் வைத்து கவனமாக ஓட்டுங்கள்” என்று பயணி அறிவுறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் ராபிடோ நிறுவனம் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்றும், அந்த ஓட்டுநர் இன்னும் அந்த நிறுவனத்தில் பணியில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மற்ற நிறுவனங்களை விடக் கட்டணம் சற்று குறைவாக இருந்தாலும், பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.