சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலை…சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி…இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!
TV9 Tamil News December 19, 2025 08:48 AM

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டு சந்தனக்கூடு விழா வருகிற டிசம்பர் 21- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை மீது கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தொழுகைகள் நடைபெறும். இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோவிலுக்கும், தற்காவுக்கும் பொதுமக்கள் சென்று தரிசனம் செய்வதற்கு ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதற்கு அனுமதி தர கோரி தர்கா சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

அதன்படி, திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 18) அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம், திருப்பரங்குன்றம் போலீசார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை…தமிழக அரசு அதிரடி!

சந்தனக் கூடு விழா நடத்த அனுமதி தர வேண்டும்

இந்த கூட்டத்தில், வழக்கம் போல, இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலை மீது சந்தனக்கூடு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, கோயில் நிர்வாகத்தினரிடம் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கோயில் நிர்வாகத்தினர் சந்தனக்கூடு விழா நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் மனு

இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். அதன்படி வரும் 21- ஆம் தேதி சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது. இதனிடையே இந்து மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பரங்குன்றம் மலை மீது சந்தனக்கூடு விழா நடத்துவதற்கும், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் தர்கா சார்பில் கொடி ஏற்றுவதற்கு அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க: பள்ளி மாணவன் கண்டெடுத்த அதிசய நாணயம்..1000 ஆண்டுகள் பழமை..ராமநாதபுரத்தில் ஆச்சரியம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.