மகாராஷ்டிராவில் 1995ம் ஆண்டு, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு விற்பனை செய்யப்படும் அரசு வீட்டை மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோடேயும், அவரது சகோதரர் விஜய்யும் வாங்கினர். அவர்கள் தாங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்று அரசு வீட்டுவசதி வாரியத்திடம் கூறி வீடுகளை வாங்கினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இந்தச் செயல் இப்போது அவர்களுக்கு பிரச்னையாக மாறி அமைச்சர் பதவியைப் பறித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்ராவ் கோடே மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் பொய்யான காரணத்தைக் கூறி வீடு வாங்கிய விவகாரத்தில் நாசிக் நீதிமன்றம் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து மாணிக்ராவ் கோடே மும்பை லீலாவதி மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார். அவர்கள் இருவருக்கும் எதிராக கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மாநில அரசு முதல் கட்டமாக மாணிக்ராவிடமிருந்த இலாக்காக்களை பறித்தது. அதனைத் தொடர்ந்து மாணிக்ராவ் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதை தொடர்ந்து நாசிக்கில் இருந்து சிறப்புப்படை போலீஸார் மும்பை வந்துள்ளனர். அவர்கள் மாணிக்ராவ் சேர்ந்திருக்கும் மருத்துவமனையில் அவரைக் கைது செய்ய சென்றனர். ஆனால் டாக்டர்கள் மருத்துவக் காரணங்களைக்கூறி அவரைக் கைது செய்ய அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அவரின் சகோதரர் விஜய் வீட்டிற்குச் சென்றனர். அங்கே அவர் இல்லை. தலைமறைவாகி இருந்தார். மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் இப்பிரச்னை அஜித்பவாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாணிக்ராவ் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரியும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.