ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் அரசியல் திருவிழாவாக மாறியது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மைதானம் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.சென்னையிலிருந்து தனி விமானத்தில் காலை 10 மணியளவில் கோவை வந்த த.வெ.க. தலைவர் விஜய், அங்கிருந்து காரில் விஜயமங்கலம் சென்றார்.

வழிநெடுக இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பின்தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மைதானம் வந்தடைந்ததும், தொண்டர்களின் கோஷங்களால் பகுதி முழுவதும் அதிர்ந்தது.பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய்,“எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
என்னை கைவிடாதீர்கள்” என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.பெரியாரை நினைவுகூர்ந்த அவர்,“பெரியார் எங்கள் கொள்கை முன்னோடி. ஒரு பைசா சம்பாதிக்காமல் பொதுவாழ்வில் இருந்தவர்.
அவரது பெயரை சொல்லி கொள்ளை அடிக்க வேண்டாம்” எனக் கடுமையாகக் கூறினார்.திமுக அரசை விமர்சித்த விஜய்,“சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. திமுகவும் பிரச்சினைகளும் பெவிகால் போல ஒட்டிக்கொண்டிருக்கிறது” என்று தாக்கினார். 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும், “தீய சக்தி திமுக – தூய சக்தி தவெக; இந்த இரண்டுக்கும் இடையில்தான் அரசியல் போட்டி” என அவர் முழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், விஜய்யை “புரட்சி தளபதி” என புகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் விஜய்க்கு வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.