“அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது”.. விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி!
TV9 Tamil News December 19, 2025 07:48 PM

சென்னை, டிசம்பர் 19: எம்ஜிஆர் முகமூடியை அணிந்தாலும், ஜெயலலிதா அல்லது அண்ணா முகமூடியை அணிந்தாலும், அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது என தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் தின விழா நேற்று (டிசம்பர் 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் கூட்டணி கொள்கை என்பது தேர்தல் சமயத்தில் கட்சிகளுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தமாக மட்டுமே பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் படிக்க: “தமிழகத்தை ஆளப்போவது விஜய்”.. செங்கோட்டையன் ஈரோட்டில் பேச்சு!

இந்த நிகழ்ச்சியில் அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரும் பங்கேற்றார். அவரிடம் தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் விஜய், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை குறிப்பிட்டதுடன், திமுகவை தீய சக்தி என விமர்சித்து, அந்த சக்தியை வீழ்த்தவே தூய சக்தியாக தவெக வந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

விஜய்க்கு தனிச்சிறப்பு இல்லை:

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனி அடையாளமும் கொள்கை தெளிவும் இருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படை இல்லாதவர்கள் தற்போது அரசியல் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். எம்ஜிஆர் என்ற முகமூடியை அணிந்தால்தான் மக்களைச் சந்திக்க முடியும், வாக்குகளைப் பெற முடியும் என நினைப்பது அவர்களிடம் தனிச்சிறப்பு இல்லை என்பதையே காட்டுகிறது எனக் கூறினார்.

வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள்:

மேலும் அவர், எம்ஜிஆர் முகமூடியை அணிந்தாலும், ஜெயலலிதா அல்லது அண்ணா முகமூடியை அணிந்தாலும், அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது. வரலாறு இதற்கு சாட்சி. தனித்த அடையாளம் இல்லாததால்தான் எங்கள் தலைவர்களின் பெயர்களையும் உருவங்களையும் பயன்படுத்துகிறார்கள் என்றார்.

ஊர்க் குருவி பருந்தாகாது:

விஜய் பேச்சு குறித்து தொடர்ந்து விமர்சித்த ஜெயக்குமார், பொத்தாம் பொதுவாக பேசுவது எளிது. நானும் அப்படிப் பேச முடியும். ஊர்க் குருவி எவ்வளவு உயரப் பறந்தாலும் பருந்தாகாது. களத்தில் நிலைபெறாதவர்கள், ஆலமரமாக வளர்ந்த அதிமுக இயக்கத்தைப் பற்றி பேசக்கூடாது. பலருக்கு அரசியல் நிழல் கொடுத்த இயக்கம் அதிமுக. முதலில் அரசியல் அடிப்படைகளைப் படித்துவிட்டு வாருங்கள் எனத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.